Tuesday, August 23, 2022

நகரத்து இறுதி யாத்திரைகள்

மாலை நேரம்.. அடர்ந்த போக்குவரத்தோடு சென்னையின்  இறுக்கமான சாலை... ஓரத்தில் ஒர் இறுதி ஊர்வலம் ஏசி வேனில் விரைந்து கொண்டிருந்தது மயானத்தை நோக்கி. சரியாக சொல்வதென்றால் அதை ஊர்வலம் என்று சொல்ல முடியாது. ஊர்தியின் உள்ளே இறந்தவரின் முகத்தை எட்டி பார்பதற்கு கூட அவகாசம் இல்லாது  விரைந்து செல்வதை எப்படி ஊர்வலம் என்று சொல்ல முடியும்.
இறந்தவரை சுற்றி மூன்று பேர் சோகத்துடன் வாகனத்தின் உள்ளே. சில வதங்கிய மாலைகள் வாகனத்தில் தொங்கி கொண்டிருந்தன. வாகனத்தின் வேகத்தில் ஓட்டுனரின் அவசரம் தெரிந்தது சீக்கிரம் மயானம் சேரவேண்டும் என்று.
வாழும் போதும் சரி, இறந்து இறுதி யாத்திரையிலும் இத்தனை இயந்திரத்தனமா.. 

நான் பார்த்த எங்கள் கிராமத்தில் ஒரு வீட்டில் இறப்பு துக்கம் என்றால் சுற்றி இருக்கக் கூடிய அனைத்து வீடுகளில் இருந்தும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். துக்க வீட்டில்  உள்ளவர்களுக்கும் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கும் சுற்றத்தார் நண்பர்கள் வீடுகளில் இருந்து சமைத்த உணவுகள் வரும். 
அனைவரும் சாப்பிட்டீர்களா என்று கரிசனத்தோடு கேட்பார்கள்.நடக்க வேண்டிய  வேலைகள் தானாக நடக்கும். 

ஏதோ ஒரு  மனக்கசப்பால் பிரிந்திருந்த உறவினர்கள் கூட துக்க வீடுகளில் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.  செய்ய வேண்டிய முறைகள்,  சடங்குகள் என்று அனைத்திலும் உறவுகள் உறுதி செய்யப்படும். துக்க வீடுகளில் பார்க்கக்கூடிய சமூக உறவுகள் சமூக இணக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. ஊருக்கு வெளியே மயானம் என்றால் உறவினர்கள் நண்பர்கள் என மாறி மாறி இறந்தவர் உடலை தங்கள் தோளில் சுமந்தபடியே நீண்ட தூரம் நடந்தே சென்று மயானத்தை அடைந்து சடங்குகள் மற்றும்  இறுதி மரியாதைகளை செய்வார்கள்.  மயானம் வரை நடந்தே செல்லும் நேரம் என்பது நண்பர்களும் உறவினர்களும் இறந்தவருடைய வாழ்க்கையை, அவருடனான தங்கள் நினைவுகளை பேசியபடியே செல்வதற்கான கால அவகாசம். ஆனால் -  உயிர்ப்பில்லாத இன்றைய நகர வாழ்க்கையில் சுருங்கி போனது இறுதியாத்திரைகள் மட்டுமல்ல மனித மனங்களும்.

Sunday, August 27, 2017

கார்த்திகேயன் பதிவுகள் - வரவேற்பு.

எனது புதிய வளைத்தளமான - கார்த்திகேயன் பதிவுகள்- உங்களை இனிதே வரவேற்கிறது.